சாங்கிலி, கோலாப்பூரில் மழை வெள்ள சேதம் முதல்-மந்திரி பட்னாவிஸ் ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார்
சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார்.
மும்பை,
மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோலாப்பூர் மற்றும் சாங்கிலி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது மகா ஜனாதேஷ் யாத்திரையை ரத்து செய்து விட்டு நேற்று முன்தினம் மந்திரி சபையை கூட்டி மேற்கொள்ளவேண்டிய வெள்ள நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்
இந்த நிலையில் அவர் நேற்று மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டார். பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது வான்வழி ஆய்வின் போது, சாங்கிலி நகரத்தின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டிருப்பதைக் கண்டேன். எனது ஹெலிகாப்டருக்கு சாங்கிலி மற்றும் காரட்டில் தரையிரங்க அனுமதி வழங்கப்படவில்லை. கோலாப்பூர் விமான நிலையத்தில் இறங்கி வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறேன்.
கோலாப்பூர் மாவட்டத்தில் 223 கிராமங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 18 கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. 3,813 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தானியங்களுடன் நிதி உதவி வழங்கப்படும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குடிநீர் வினியோகம் மற்றும் மின்சாரம் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா ஒப்புதல்
அதுமட்டும் இன்றி கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள அலமாட்டி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் சாங்கிலி, கோலாப்பூர் உள்ளிட்ட மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களில் தண்ணீர் சற்று வடியும். இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடர்புகொண்டு பேசினார். அப்போது நிலைமையை கருத்தில் கொண்டு கர்நாடகாவின் அலமாட்டி அணையில் இருந்து 5 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட அவர் ஒப்புக்கொண்டார். அதன்படி திறந்து விட்டால் மேற்கு மராட்டிய பகுதிகளில் நிலைமை சற்று சீராகும் என கருதப்படுகிறது.