இடிந்து விழும் நிலையில் 96 அங்கன்வாடி மையங்கள்
தேனி மாவட்டத்தில் 96 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அதிகம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் மொத்தம் 1,025 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ளன. இதில், 762 அங்கன்வாடி மையங்கள் அரசு கட்டிடத்திலும், 263 மையங்கள் வாடகை கட்டிடத்திலும் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசு கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களின் நிலைமை குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் சிறு பழுது, பெரிய அளவிலான பழுதுகள், இடித்துக் கட்ட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அத்துடன், மின்சார வசதி, கழிப்பிட வசதி தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இதன் அடிப்படையில், அரசு கட்டிடத்தில் இயங்கும் 69 அங்கன்வாடி மையங்களில் சிறிய அளவிலான பழுதுகள் இருப்பதாகவும், 53 மையங்களில் பெரிய அளவிலான பழுது ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன், 96 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அவற்றை இடித்துக் கட்ட வேண்டிய நிலைமை உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இடித்து கட்ட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்களில் கிராம ஊராட்சி பகுதிகளில் 46 கட்டிடங்களும், பேரூராட்சி பகுதிகளில் 24 கட்டிடங்களும், நகராட்சி பகுதிகளில் 26 கட்டிடங்களும் உள்ளன.
தேனி, பூதிப்புரம், சின்னமனூர், ஆண்டிப்பட்டி, போடி உள்பட பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையங்கள் சேதம் அடைந்து உள்ளன. பல இடங்களில் மேற்கூரை சேதம் அடைந்து மழைநீர் ஒழுகும் நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகள் ஆபத்தான சூழ்நிலையில் அங்கன்வாடி மையங்களில் படிக்க வேண்டிய நிலைமை உள்ளது.
அத்துடன் கிராமப்புற பகுதிகளில் உள்ள 175 அங்கன்வாடி மையங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 130 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 305 அங்கன்வாடி மையங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லை. அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதேபோல், 187 மையங்களில் குழந்தை கழிப்பிட வசதி இல்லை. இதுபோன்ற மையங்களில் குழந்தைகளுக்கான கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.
மின்சார வசதியை பொறுத்தவரை 328 மையங்களுக்கு மின் இணைப்பு வசதி இல்லை என்று கூறப்படுகிறது. மின் இணைப்பை பொறுத்தவரை கிராமப்புற பகுதிகளில் தான் அதிக அளவில் கிடைக்கப்பெறாமல் உள்ளது.
இதுகுறித்த விவரங்கள் மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பழுதடைந்த அங்கன்வாடி மையங்களில் தேவையான மராமத்துப் பணிகளை விரைந்து மேற்கொள்ள கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பருவமழைக் காலம் என்பதால், சேதம் அடைந்துள்ள அங்கன்வாடி மையங்களை உடனே சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.