புல்லாவெளி பகுதியில், தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்
பெரும்பாறை அருகே புல்லாவெளி பகுதியில் தோட்டங்களுக்குள் காட்டுயானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து பயிர் களை சேதப்படுத்தியது.
பெரும்பாறை,
திண்டுக்கல் மாவட்டத்தில் தாண்டிக்குடி, ஆடலூர், மருமலை, பெரியூர், நடுப்பட்டி, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பள்ளத்துக்கால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.
குறிப்பாக காட்டுயானைகள் அந்த பகுதிகளில் உள்ள தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் அங்கு பயிரிடப்பட்டிருக்கும் காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் புல்லாவெளி மலைப்பாதையில் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த யானை புல்லாவெளி பகுதியில் கீழ்இஞ்சி ஓடை, மேல்இஞ்சி ஓடை வழியாக ஓவாமலை பகுதிக்கு சென்றது. அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து காபி, வாழை பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த வத்தலக்குண்டு வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனவர் முத்துச்சாமி மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த யானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் புகுந்தது. அந்த பகுதியில் தொடர்ந்து காட்டுயானை அட்டகாசம் செய்வதை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.