தாராபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 45 யூனிட் மணல் பறிமுதல் - சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை

தாராபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 45 யூனிட் மணலை சப்-கலெக்டர் பறிமுதல் செய்தார்.

Update: 2019-08-08 21:30 GMT
தாராபுரம்,

தாராபுரம் அமராவதி ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் திருட்டை தடுக்க வருவாய்த்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மணல் திருட்டை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. சமீபத்தில் சில சமூகவிரோதிகள் அமராவதி ஆற்றில் மணலை திருடிச் சென்று, பெரமியம் அருகே ஒரு தோட்டத்தில், பதுக்கி வைத்திருந்தனர். தகவல் அறிந்த சப்-கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த மணல் அனைத்தும் அனுமதியின்றி அமராவதி ஆற்றில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. உடனடியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 360 யூனிட் மணலை சப்-கலெக்டர் பறிமுதல் செய்தார். பிறகு பறிமுதல் செய்யப்பட்ட மணல் அனைத்தும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று நகர் பகுதியில் உள்ள பழைய ஹவுசிங் யூனிட்டுக்கு அருகே, என்.எம்.பி. நகரில், பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான காலி இடத்தில், ஆற்று மணல் மலைபோல் கொட்டிவைத்திருப்பதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள், அப்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, அனுமதியின்றி 45 யூனிட் மணல் வாங்கி குவித்து வைத்திருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் சப்-கலெக்டர் பவன்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து சப்-கலெக்டர் மற்றும் தாசில்தார் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை இளம்பொறியாளர் சுப்பையன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள். மணல் கொட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது நில உரிமையாளரிடம், மணல் வாங்கியதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது. அனுமதியின்றி வாங்கப்பட்ட மணல் என்பதால், 45-யூனிட் மணலையும் சப்-கலெக்டர் பறிமுதல் செய்து, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து சப்-கலெக்டர் கூறியதாவது:-

தற்போது மணல் குவாரிகள் இல்லாததால், ஆற்று மணல் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டுபவர்கள் மணலுக்கு பதிலாக எம் சேண்ட் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் 45 யூனிட் மணல் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தெரியவில்லை. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் மணல் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மணல் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.

இந்த தாலுகாவில் புதிதாக கட்டிடங்கள் கட்டுபவர்கள், மணலை பயன்படுத்த வாய்ப்பில்லை. மணல் கிடைக்கும் பட்சத்தில், மணலை வாங்கியதற்கான ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம். போதிய ஆவணங்கள் இல்லாமல் மணல் வைத்திருப்பது தெரியவந்தால், உடனடியாக மணல் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். மேலும் மணல் வைத்திருப்போர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். திருட்டு மணல் வாங்குவது சட்டப்படி குற்றமாகும்.

எனவே திருட்டு மணல் வாங்கி கட்டிடம் கட்டுவது தெரிந்தால், பொது மக்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். முறையாக ஆய்வு செய்து, அனுமதியின்றி மணல் வாங்குவோர் மீதும், விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்