ஸ்ரீமுஷ்ணம், பாளையத்து மாரியம்மன் கோவிலில் 3 பவுன் நகை மாயம் - பூசாரி திருடிச்சென்று விட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
ஸ்ரீமுஷ்ணம் பாளையத்து மாரியம்மன் கோவிலில் 3 பவுன் நகை மாயமானது. அதை பூசாரி திருடிச்சென்று விட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் திருப்பாளையாத்தெருவில் பாளையத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே தெருவை சேர்ந்த கலியமூர்த்தி(வயது 55) என்பவர் பூசாரியாக இருந்து வந்தார். அந்த தெரு பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு 3 பவுன் சங்கிலி, வெள்ளிக்காப்பு ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்தனர். கோவிலில் பூஜை நடைபெறும்போதெல்லாம் அம்மனுக்கு தங்க சங்கிலி மற்றும் வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆடி மாதம் திருவிழா நடத்துவதற்காக பொதுமக்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது, அம்மன் கழுத்தில் நகையும், காலில் காப்பும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பூசாரியிடம் கேட்டபோது, கலியமூர்த்தி சரியான பதிலை கூறவில்லை.
இது குறித்து வேல்முருகன் மனைவி ஜெயமாலினி(வயது 35) என்பவர் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பாளையத்து மாரியம்மன் கோவிலில் இருந்த நகை மற்றும் வெள்ளிக்காப்பை பூசாரி கலியமூர்த்தி திருடிச்சென்று விட்டதாக கூறி இருந்தார். ஆனால் அந்த புகாரை ஏற்காத போலீசார், வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த திருப்பாளையாத்தெரு பொதுமக்கள் ஒன்று திரண்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று, இதுவரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போலீஸ் நிலையம் அருகில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், கோவிலில் நகை மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கலியமூர்த்தி விஷம் குடித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் குணமடைந்ததும் கைது செய்வதாகவும் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.