ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பரமத்தி வேலூரில் உள்ள ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-08 23:00 GMT
பரமத்திவேலூர், 

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள ராஜா வாய்க்கால் புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் நன்செய்இடையாறு, பொய்யேரி வாய்க்கால் புனரமைக்க ரூ.30 லட்சமும், பரமத்தி வேலூரில் ராஜா வாய்க்கால் வெளிபோக்கு மற்றும் இடது கரை புனரமைக்க ரூ.57 லட்சமும், சின்னாக்கவுண்டம்பாளையம் ராஜா வாய்க்கால் வெளிபோக்கி புனரமைக்க ரூ.30 லட்சமும், குன்னத்தூர் ராஜா வாய்க்காலில் உபரி நீர் போக்கி புனரமைக்க ரூ.30 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் அய்யம்பாளையம் ராஜா வாய்க்கால் தலை மதகு புனரமைக்க ரூ.49 லட்சமும், வடகரையாத்தூரில் ராஜா வாய்க்காலுக்கும், காவிரி ஆற்றிற்கும் இடையே ராஜா வாய்க்கால் வலது கரை புனரமைக்க ரூ.45 லட்சமும் மொத்தம் ரூ.2 கோடியே 41 லட்சம் முதல்- அமைச்சரின் குடிமராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்கம் சார்பில் ராஜா வாய்க்காலில் புனரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் தொடங்கி சுமார் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை ராஜா வாய்க்கால் புனரமைப்பு பணிகள் முடியவில்லை. இதன் காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ராஜா வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

பரமத்தி வேலூர் பகுதியில் ராஜா வாய்க்கால் பாசனத்தை நம்பி வாழை, வெற்றிலை, கோரை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடிசெய்யப்பட்டு உள்ளன. தண்ணீர் திறக்கப்படாததால் ரூ.50 கோடி மதிப்பிலான வெற்றிலை, வாழை, கோரை உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ராஜா வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சரபங்கா வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், விவசாயிகளிடம், வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்