மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-08 23:00 GMT
திருவாரூர்,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக்கூடாது. இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழிக்கக்கூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்க கூடாது. வரைவு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.

கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

இந்தநிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, கண்களில் கருப்புத்துணி கட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

மேலும் செய்திகள்