தேசிய கைத்தறி தின விழா, அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் கைத்தறி ஆடை அணிய வேண்டும் - அமைச்சர் ராஜலட்சுமி வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் கைத்தறி ஆடை அணிய வேண்டும் என்று நெல்லையில் நேற்று நடந்த தேசிய கைத்தறி தின விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.;
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சாரல் அரங்கத்தில் தேசிய கைத்தறி வார விழா நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். கைத்தறி துறை உதவி இயக்குனர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
நெசவாளர்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட் வரையும் மின்சாரம், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 750 யூனிட் வரையும் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆண்டுக்கு ஒரு முறை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இலவச வேட்டி-சேலை, மாணவ-மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள் கைத்தறி துணியால் வழங்கப்படு கிறது.
கைத்தறி தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம், காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரம் மேம்பட அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கைத்தறி தினத்தையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துணி கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதை அமைச்சர் ராஜலட்சுமி பார்வையிட்டார்.
விழாவில், நெல்லை மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.