திண்டுக்கல்லில் பயங்கரம், சொத்து தகராறில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை - தம்பி கைது

திண்டுக்கல்லில், சொத்து தகராறில் கட்டிட தொழிலாளியை குத்திக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-07 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் சின்னப்பன். அவருடைய மகன்கள் இஸ்ரவேல்ராஜா (வயது 46), விஜி என்ற சிங்கராயன் (43). இதில், இஸ்ரவேல்ராஜா கட்டிட தொழிலாளி ஆவார். தற்போது இவர், திருச்சியில் கட்டிட வேலை செய்து வந்தார். இதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சண்முகநகரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கூலித்தொழிலாளியான சிங்கராயன், திண்டுக்கல் முருகபவனத்தில் வசித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னப்பன் இறந்து விட்டார். இதனால் முத்தழகுபட்டியில் உள்ள பூர்வீக வீடு மற்றும் நிலத்தை பிரிப்பது தொடர்பாக அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் முத்தழகுபட்டியில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்காக நேற்று முன்தினம் இஸ்ரவேல்ராஜா திருச்சியில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். இதை அறிந்த சிங்கராயனும் நேற்று முத்தழகுபட்டிக்கு வந்தார்.

அப்போது பூர்வீக வீடு மற்றும் நிலத்தை பிரித்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடைய தாயார் மற்றும் உறவினர்கள் தலையிட்டு 2 பேரையும் சமரசம் செய்தனர். இதற்கிடையே நேற்று காலையிலும் மீண்டும் பிரச்சினை உருவானதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரம் அடைந்த சிங்கராயன், உடன் பிறந்த அண்ணன் என்றும் பார்க்காமல் இஸ்ரவேல்ராஜாவை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர் கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிங்கராயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் சொத்து தகராறில் அண்ணனை, தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்