தூத்துக்குடியில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மதியம் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் முருகபெருமாள் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகண்ணன், சஞ்சார் நிகாம் அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் மரியஅந்தோணிபிச்சையா, அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சொர்ணராஜ் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அடிப்படை சேவைகள் தொடர தேவையான நிதி ஆதாரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும், சேவையை விரிவுபடுத்த தேவையான நிதியை வங்கியில் கடனாக பெறுவதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும், சேவை விரிவுபடுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட கிளை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.