கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது திடுக்கிடும் தகவல்கள்
தூக்க மாத்திரை கலந்த `டீ' யை கொடுத்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். இந்த கொலை பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.;
தானே,
தானே மிராரோடு கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் பிரமோத் பதான்கர் (வயது 43). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீப்தி (வயது 36). இந்தநிலையில், பிரமோத் பதான்கர் கடந்த மாதம் 15-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நவ்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். பிரேதப்பரிசோதனை அறிக்கையில் பிரமோத் பதான்கர் அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டும், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் அவரது மனைவியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் தான் கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
கள்ளக்காதல்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
தீப்தி கோரேகாவில் உள்ள பள்ளி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் புனேயை சேர்ந்த உத்தவ் பஜான்கர் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது பிரமோத் பதான்கருக்கு தெரியவர கணவர், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் எரிச்சல் அடைந்த பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்ட திட்டம் போட்டார்.
கழுத்தை நெரித்து கொன்றார்
அதன்படி அவர் கடந்த மாதம் தனது மகளை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் தூக்க மாத்திரை கலந்த டீயை கணவருக்கு கொடுத்தார். டீயை குடித்ததும் மயக்கமடைந்த கணவர் பிரமோத் பதான்கரை, கள்ளக்காதலுடன் சேர்ந்து தீப்தி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க கணவர் அருந்திய டீ கப்பில் `லிப்ஸ்டிக்' மூலம் உதடு வடிவத்தை வரைந்தார். மேலும் ஆணுறைகளை தலையணைக்கு கீழ் வைத்து தனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் சித்தரித்தார். இதையடுத்து அவரே நவ்கர் போலீசாருக்கு போன் செய்து தகவல் கொடுத்துவிட்டு எதுவும் தெரியாது போல் இருந்து கொண்டார்.
இந்தநிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில், அவரது கொலை நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து போலீசார் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற தீப்தியையும் அவரது கள்ளக்காதலன் உத்தவ் பஜான்கரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.