பழனி அருகே, கரடிக்கூட்டம் கூட்டுறவு சங்க தலைவரை நீக்க வேண்டும் -துணை பதிவாளர் அலுவலகத்தில் உறுப்பினர்கள் மனு
பழனி அருகே கரடிக் கூட்டம் கூட்டுறவு சங்க தலைவரை நீக்க வேண்டும் என்று பழனியில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
பழனி,
பழனியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்துக்கு கரடிக் கூட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 7 பேர் நேற்று காலை வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கரடிக்கூட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 1,200 பேர் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். 11 பேர் நிர்வாக உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 10-8-2018-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் ராமச்சந்திரன், ரகுபதி ஆகியோர் தலைவர் மற்றும் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள்முதல் இதுவரை முறையாக கூட்டம் நடத்தவில்லை. சில வேளைகளில் கூட்டம் நடத்தாமலேயே கையொப்பம் மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்.
அதேபோல் விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் செயல்பாடுகள் இல்லை. நிர்வாக உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் சங்கத்தின் வரவு- செலவு கணக்குகளை யாருக்கும் காட்டவில்லை. இதுகுறித்து கேட்டாலும் முறையாக பதிலும் இல்லை.
எனவே சங்க தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டது. எனவே 11 நிர்வாக உறுப்பினர் களில் 7 பேர் அவர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். ஆகையால் அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்துவிட்டு, புதிதாக தலைவர், துணைத்தலைவர் பதவிக்காக தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக கூறினர்.