சென்னை விமான நிலையத்தில் ஆமதாபாத், கோவா விமானங்களில் கோளாறு பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆமதாபாத், கோவா செல்ல இருந்த விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2019-08-07 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து ஆமதாபாத்துக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய 155 பேரும், 6 விமான நிறுவன ஊழியர்களும் தயாராக இருந்தனர். நடைமேடையில் இருந்து விமானத்தை ஓடுபாதைக்கு விமானி கொண்டு சென்றார்.

அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்தார். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் மீண்டும் விமானத்தை நடைமேடைக்கு கொண்டு வந்தார். உடனடியாக விமான நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்துவந்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மாற்று விமானம்

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படவில்லை. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால் தங்களுக்கு உணவு எதுவும் தராமல் காலதாமதம் செய்வதாக கூறி பயணிகள் கோஷம் போட்டனர். இதையடுத்து அங்குவந்த அதிகாரிகள், பயணிகளை சமரசம் செய்தனர். சுமார் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு மாற்று விமானத்தில் பயணிகள் அனைவரும் ஆமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவா

இதேபோல் சென்னையில் இருந்து கோவா செல்வதற்காக விமானத்தில் 60 பேர் தயாராக இருந்தனர். ஆனால் அந்த விமானத்திலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் அனைவரும் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 8 மணி நேர தாமதத்துக்கு பிறகு வேறு விமானத்தில் அனைவரும் கோவா சென்றனர். இதனால் அதில் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலதாமதம் ஏற்படுவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்