கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2019-08-07 22:15 GMT
கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலால் உதவி ஆணையர் தாஜூதீன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராமபிரபு, வட்ட வழங்கல் அலுவலர் தனபால், வட்டார வேளாண்மை அலுவலர் பிரியங்கா, கால்நடை உதவி மருத்துவர் ஜெயக்குமார், தலைமையிடத்து நில அளவர் சையத்ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணியம் வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசியதாவது:-

கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் 35 கிலோ அரிசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலை பணி பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 ஆண்டுகள் வழங்கப்படாமல் உள்ள கரும்பு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் கானலாபாடி சாலையோரம் பக்க கால்வாய் அமைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தினை விவசாய உணவு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு குறையும். இதுவரை நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டங்களில் தெரிவிக்கும் கோரிக்கை எதுவும் நிறைவேற்ற வில்லை. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

அதைத் தொடர்ந்து மாவட்ட கலால் உதவி ஆணையர் தாஜூதீன் பேசுகையில், ‘குறைகள் தெரிவிப்பவர்கள் முறையான கோரிக்கை மனுக்களாக வழங்க வேண்டும். அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும்’ என்றார்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் வயலூர் சதாசிவம், முத்தகரம் பழனிசாமி, வரதராஜன், சற்குணம், சிவக்குமார், சுப்பராயன், துரைராஜ், கேசவன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்