ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கண்மாய்கள் தூர்வாரும் பணி

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்கள் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-08-07 22:15 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாய பாசனதாரர் சங்க பிரதிநிதிகளிடம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவேண்டும். கண்மாய் புனரமைப்பு பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்ற வேண்டும். கரையை பலப்படுத்தி கரையோரங்களில் அதிக அளவில் பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், நீர் பிடிப்பு பகுதிகளை தூர்வாருதல், நீர் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக்கு ஏற்ப சீரமைத்தல், புதிதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த புனரமைப்பு பணிகளை சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக்குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத்தொகையும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்பு தொகையும் உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்யவும், ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தும் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் முதல் 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2 மற்றும் 3-ம் பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பாபு, மற்றும் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விவசாய பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்