கர்ப்பிணி மகளை ஆணவ கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை ஐகோர்ட்டு உறுதி செய்தது
கர்ப்பிணி மகளை ஆணவ கொலை செய்த வழக்கில் தந்தைக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.;
மும்பை,
நாசிக் மாவட்டத்தை சேர்ந்தவர் ஏக்நாத் கும்பர்கர்(வயது38). இவரது மகள் பிரமிளா(18). இவர் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்த வாலிபரை கரம் பிடித்தார்.
இது ஏக்நாத் கும்பர்கருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பிரமிளாவின் வீட்டிற்கு சென்ற அவர், 9 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மகளை கொடூரமாக கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இந்த ஆணவக்கொலை வழக்கை விசாரித்த நாசிக் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு ஏக்நாத் கும்பர்கருக்கு தூக்குதண்டனை விதித்தது.
இந்த தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த கோரி மராட்டிய அரசு ஐகோர்ட்டில் மனு செய்தது.
உறுதி செய்தது
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஏக்நாத் கும்பர்கருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாதிகாரி, சுவப்னா ஜோஷி தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:-
ஏக்நாத் கும்பர்கர், திட்டமிட்டு தனது சொந்த மகளை மிருகத்தனமாகவும், கொடூரமாகவும் கொலை செய்துள்ளார். மேலும் பிறக்காத தனது பேரக்குழந்தையின் உயிரிழப்பிற்கும் காரணமாக இருந்துள்ளார். அவர் தனது செயலின் பின் விளைவுகளை நன்கு அறிந்திருந்தும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளார்.
அவர் தந்தைக்கும், மகளுக்குமான பாரம்பரிய மதிப்புகளை உடைத்துள்ளார். ஏக்நாத் கும்பர்கர் இந்த சமுதாயத்திற்கு ஒரு அச்சுறுத்தல் ஆவார். எனவே இதை அரிதிலும், அரிதான வழக்காக கருதி அவருக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான தூக்குதண்டனையை உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.