மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 குறைகிறது பெஸ்ட் குழுமம் முடிவு

மும்பையில் மின்சார கட்டணத்தில் யூனிட்டுக்கு 1 ரூபாய் குறைக்க பெஸ்ட் குழுமம் முடிவு செய்து உள்ளது.

Update: 2019-08-06 22:47 GMT
மும்பை,

மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெஸ்ட் குழுமம் பஸ் மற்றும் மின்சார சேவைகளை வழங்கி வருகிறது. நஷ்டத்தில் இயக்கப்படும் பெஸ்ட் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பஸ் கட்டணத்தை அதிரடியாக குறைத்தது.

இதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து 5 ரூபாயாக குறைந்தது. அதிகபட்சமாக 25 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது பெஸ்ட் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.

மின் கட்டணம்

பஸ் கட்டணத்தை குறைத்த நிலையில், மின்சார கட்டணத்தையும் குறைக்க பெஸ்ட் குழுமம் அதிரடியாக முடிவு செய்து உள்ளது. இதன்படி யூனிட்டுக்கு 1 ரூபாய் குறைக்கப்படுகிறது.

ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் 23 பைசாவாக இருந்த மின்சார கட்டணம் கடந்த ஆண்டு 24 பைசா குறைக்கப்பட்டு 7 ரூபாய் 99 பைசாவாக வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது 1 ரூபாய் குறைக்கப்படுவதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 6 ரூபாய் 99 பைசா வசூலிக்கப்படும். இது நகரில் மின்சப்ளை வழங்கி வரும் அதானி, டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் கட்டணத்தை விட மிக குறைவு ஆகும்.

மேலும் செய்திகள்