நெல்லை மாவட்டத்தை கலக்கிய, 4 கொள்ளையர்கள் கைது; 2¼ கிலோ தங்கம் அதிரடி மீட்பு
நெல்லை மாவட்டத்தை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2¼ கிலோ தங்கத்தை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
பணகுடி,
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள சங்குநகரை சேர்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் பாலன் (வயது 65). கடந்த மாதம் இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த 134 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொள்ளையர்களை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையில் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்டோ பிரதீப், அருண், ஏட்டுகள் ஷஜிஸ், பிரைட் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள், குமரேசன் மகன் சேர்மத்துரை (25), செல்லத்துரை மகன் மணி என்ற பாலகிருஷ்ணன் (31), அவர்களுக்கு உடந்தையாக இருந்த மந்திரம் மகன் மற்றொரு சேர்மத்துரை (26), சின்னத்துரை மகன் சுயம்புலிங்கம் (29) ஆகியோர் ஆவர்.
கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறித்து வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரிஹிரன் பிரசாத் பணகுடி போலீஸ் நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 கொள்ளையர்களை கைது செய்து உள்ளனர்.
இவர்கள் பணகுடி, சிவந்திபட்டி, நெல்லை மாநகரம், நெல்லை தாலுகா, பெருமாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளை அடித்து உள்ளனர்.
இவர்கள் மீது தற்போது பணகுடி போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகளும், சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், நெல்லை தாலுகா போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், பெருமாள்புரம், மேலப்பாளையம் போலீஸ் நிலையங்களில் தலா 1 வழக்குகளும் உள்ளன.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ரூ.61¾ லட்சம் மதிப்புள்ள 2¼ கிலோ தங்கம், ½ கிலோ வெள்ளி நகைகள், மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தையும் உருக்கி கட்டியாக மாற்றி வைத்து இருந்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்லுங்கள். அவ்வாறு சொல்லிவிட்டு செல்வதால் உங்கள் வீட்டின் முன்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்களது பகுதியில் சந்தேகத்தின் பேரில் மர்மநபர்கள் நடமாட்டம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான 4 பேரும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க மறுப்பதால் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.