கோவில்பட்டி அருகே, கண்மாயில் அதிக ஆழத்துக்கு சரள் மண் அள்ள எதிர்ப்பு - பொக்லைன் எந்திரங்கள் சிறைபிடிப்பு
கோவில்பட்டி அருகே கண்மாயில் அதிக ஆழத்துக்கு சரள் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தாலுகா அலுவலகத்தில் அனுமதி பெற்ற சிலர், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்துக்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரற்ற முறையில் சரள் மண் அள்ளினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று பெரியகுளம் கண்மாயை முற்றுகையிட்டு, 3 பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் பாபு, கிளை செயலாளர்கள் முப்பிடாதி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடனே தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெரியகுளம் கண்மாயில் சரள் மண் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக தாசில்தார் தெரிவித்தார்.
இதையடுத்து கண்மாயில் அதிக ஆழத்துக்கு சீரற்ற முறையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும். கண்மாய் கரையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதையடுத்து அவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.