14 மாதங்கள் காங்கிரசுக்கு அடிமை போல் வேலை செய்தேன் குமாரசாமி பரபரப்பு பேட்டி

14 மாதங்கள் காங்கிரசுக்கு அடிமை போல் வேலை செய்தேன் என்றும், கூட்டணியை எங்கள் கட்சியினர் விரும்பவில்லை என்றும் குமாரசாமி கூறினார்.

Update: 2019-08-06 22:01 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். மந்திரிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணிக்கு தலைமை ஏற்று முதல்-மந்திரியாக பணியாற்றினேன். கூட்டணி கட்சிகளின்எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வாரிய தலைவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் ஏன் என்னை விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அடிமை போல் வேலை செய்தேன்

நான் முதல்-மந்திரியாக இருந்த 14 மாதங்கள், பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கும், காங்கிரசுக்கும் அடிமை போல் வேலை செய்தேன். இவ்வாறு பணியாற்றியபோதும், அவர்கள் ஏன் என்னை விமர்சனம் செய்கிறார்கள். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தபோது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் இதை விரும்பவில்லை.

காங்கிரஸ் தலைமை, ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க இதயபூர்வமாக விரும்பியது. அக்கட்சியை சேர்ந்த சில உள்ளூர் தலைவர்கள் இதை விரும்பவில்லை என்பது எனக்கு தெரியவந்தது. கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்து காங்கிரசை சேர்ந்த சில தலைவர்கள், எவ்வாறு நடந்து கொண்டனர், எப்படி பேசினர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரூ.19 ஆயிரம் கோடி

எங்கள் கட்சியை விட காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு தான் அதிக நிதியை ஒதுக்கினேன். முன்கூட்டியே நேரம் கேட்டு அனுமதி பெறாமல் வந்தபோதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தேன். அவர்கள் கூறிய வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டேன்.

முந்தைய காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளில் செய்ய முடியாததை, 14 மாதங்களில் நான் செய்து முடித்தேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு 14 மாதங்களில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினேன். காங்கிரசுடன் கூட்டணி அமைத்தபோதே, எங்கள் கட்சியின் சில தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

யாரும் பாராட்டவில்லை

ஆனால் காங்கிரசின் உதவியுடன் நான் கூட்டணி ஆட்சியை அமைத்தேன். காங்கிரசார் எப்படி முதுகில் குத்துவார்கள் என்பது எங்கள் கட்சியினருக்கு தெரிந்திருந்தது. 14 மாதங்களில் நான் செய்த பணிகளை யாரும் பாராட்டவில்லை. இது எனது இதயத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 14 மாதங்களில் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன்.

பதவி விலகிய பிறகு தற்போது நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருங்காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எங்கள் கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் மேலிடம் இப்போதும் எங்களுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் தொடர்பில் உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

காங்கிரஸ் மீது குறை கூறி குமாரசாமி அளித்துள்ள இந்த பேட்டி, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்