சவுதி அரேபியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் தங்கம் பறிமுதல் வடமாநில டிரைவர் கைது
சென்னை விமான நிலையத்தில், சவுதி அரேபியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்த வடமாநில டிரைவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து மஸ்கட் வழியாக விமானம் சென்னை வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த வட மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்த மும்ஷில் உசேன் (வயது 40) என்பவர் வந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முண்ணுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
தங்கம் பறிமுதல்
அதில் இருந்த டார்ச் லைட் ஒன்றை பிரித்து பார்த்தபோது, அதில் 16 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கொண்டு வந்திருப்பது கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அவர் ரியாத்தில் கடந்த 4 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வருவதாகவும், அங்குள்ள நண்பர் இந்த பையை தந்து சென்னையில் ஒப்படைத்து விடுமாறு கூறியதால் இங்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.70 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 865 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மும்ஷில் உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.