விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலையில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-06 23:15 GMT
பத்மநாபபுரம்,

நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் புஷ்பாகரன் பறக்கை பகுதியில் இருந்து என்.ஜி.ஓ. காலனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கொலையாளிகளை அடையாளம் காண்பதில் முதலில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு கொலை நடந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்தனர். அந்த கேமராவில், புஷ்பாகரன் மோட்டார் சைக்கிளில் சென்றதையும், அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் சென்றதும் பதிவாகி இருந்தது.

அதில் உள்ள நபர்கள் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதன்பிறகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு பெண்ணின் மீது உரசியதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஒரு தலைக்காதல் தொடர்பாகவும் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே நேற்று காலை பறக்கை பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (18), மாதேஷ் கண்ணன் (18), குளத்தூரை சேர்ந்த சஞ்சய்குமார் (19), சஜன் ஆல்பர்ட் (20) ஆகிய 4 பேரும் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சரணடைய வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவர் களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக கிஷோர் குமாரின் அண்ணன் பிரசன்னாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்