துவரங்குறிச்சி அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்

துவரங்குறிச்சி அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

Update: 2019-08-06 22:15 GMT
வையம்பட்டி,

தூத்துக்குடி திவ்யபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரிஜாக் ஆம்ஸ்ட்ராங்க்(வயது 22). இவரது நண்பர் விஜயகோவிந்தராஜ் (21). இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர்கள் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே ஒரு தனியார் பள்ளியின் எதிரே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரிஜாக் ஆம்ஸ்ட்ராங்க் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

விஜயகோவிந்தராஜ் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்