வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் மனவருத்தம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

உத்திரமேரூர் அருகே வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியாத காரணத்தால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-06 22:00 GMT
உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ள நல்லூர் புதுத்தெருவை சேர்ந்தவர் முனியன் (வயது 55). விவசாயியான இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத மனவருத்தத்தில் இருந்தார்.

இதனால் முனியனுக்கும் அவரது மனைவி காந்தாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்டு முனியன் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

இரவு வெகுநேரம் ஆகியும் முனியன் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் உத்திரமேரூரை அடுத்த மருதம் காட்டில் ஆண் ஒருவர் இறந்துகிடப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

இறந்து கிடந்தவரின் அருகில் மதுபாட்டிலும், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்தன. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்ததில் அவர் முனியன் என்பது தெரியவந்தது. முனியன்வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் முனியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்