அய்யனார் கோவில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டு லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே அய்யனார் கோவில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்களை திருடிய லாரி டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-06 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த சூரியமணல் கிராமத்தில் செட்டிகுழிப்பள்ளம் செல்லும் சாலையின் அருகே அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள் கோவிலில் இருந்த பித்தளை பொருட்கள் அனைத்தையும் திருடி சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு, அப்பகுதியில் உள்ள தைலமர தோப்பு வழியாக சென்று கொண்டு இருந்தனர்.

2 பேர் கைது

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சூரியமணல் பகுதியைசேர்ந்த கண்ணன்(வயது 43) மற்றும் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பழகன்(43) என்பது தெரிந்தது. மேலும் அன்பழகன் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனையும், அன்பழகனையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை பறிமுதல் செய்து பித்தளை பொருட்களை மீட்டனர். தொடர்ந்து வழக்குப் பதிந்து அவர்கள் வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்