மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது
சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்,
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார். இதனால் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த பழைய குற்றவாளிகளின் பட்டியல் மூன்று பிரிவாக பிரித்து, அவர்களது வீடுகளுக்கு சென்று தற்போதைய செயல்பாடு குறித்து போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான கருமலைக்கூடலை சேர்ந்த பூபதி, பிரசாத், கோபி, ஓமலூரை சேர்ந்த சசிக்குமார், கெங்கவல்லியை சேர்ந்த ஜெயராமன், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த ரத்தினவேல் உள்ளிட்ட 7 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்களை தவிர, மாவட்டம் முழுவதும் 45 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதியில் உள்ள உதவி கலெக்டர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு உறுதிமொழி பத்திரத்தில் கையழுத்து வாங்கினர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம், என்றனர்.