நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2019-08-05 22:30 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள ஓவேலி சுண்ணாம்பு பாலம், பார்வுட், பாண்டியாறு, புத்தூர்வயல், பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கூடலூர்-ஊட்டி சாலையில் 27-வது மைல் பகுதியில் இரவு 9 மணிக்கு மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் 1 மணி நேரம் கழித்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் மரம் சாய்ந்து விழுந்தது. அதை தீயணைப்பு படையினர் மரத்தை மின்வாள் மூலம் அறுத்து அகற்றியதால் போக்குவரத்து சீரானது. மேலும் சளிவயல் அங்கன்வாடி மையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவுகிறது.

இதற்கிடைய கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று விடுமுறை அளித்து உத்தரவிட் டார். பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. இதனால் கூடலூர் பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வருவாய் உள்பட அரசு துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இதேபோன்று எமரால்டு மற்றும் அதன் சுற்று வட்டாரத் தில் உள்ள இத்தலார், மணியட்டி, மீக்கேரி, தங்காடு, பிக்கட்டி, காந்திகண்டி, தேவர்சோலை, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் எமரால்டு பிக்குலிபாலம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 210 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்