ஓசூரில் துணிகரம், தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 100 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 57). இவர் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர் கார் விபத்தில் சிக்கி, தற்போது கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அவரது மருமகன் ராமகிருஷ்ணன் என்பவர், ராமசாமியின் வீட்டில் தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராம கிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றார். பின்னர் அவர் நேற்று அங்கிருந்து ஓசூருக்கு திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்களை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோக்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 100 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.