பள்ளி கழிவறை சுவர் இடிந்து, படுகாயம் அடைந்த மாணவிக்கு மேல்சிகிச்சைக்கு ஏற்பாடு

பள்ளி கழிவறை சுவர் இடிந்து படுகாயம் அடைந்த மாணவிக்கு மேல்சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Update: 2019-08-05 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் செல்வவேல். இவரது மனைவி பார்வதி. இவர்களின் இளைய மகள் காயத்ரி (வயது 10). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த மாதம் 4-ந் தேதி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவி காயத்ரி படுகாயம் அடைந்தாள்.

இந்த நிலையில் செல்வவேல்-பார்வதி தம்பதியினர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மகள் காயத்ரியை தூக்கி வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் எங்களது மகளுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவள், பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி சிகிச்சை முடிந்ததாக கூறி மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் எங்களது மகள் இன்னும் பூரண குணம் அடையவில்லை. மேற்கொண்டு எங்கள் மகளுக்கு மேல் சிகிச்சை செய்ய என்னிடம் வசதி இல்லை. எனவே மேல்சிகிச்சை அளிக்க பள்ளி கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும். பள்ளி நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் மீதும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்