மாவட்ட நிர்வாகம்- போலீசாரை கண்டித்து விவசாயிகள் தர்ணா
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.;
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் சம்பவங்களை தடுக்க மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்கள் யாரும் மண்எண்ணெய், பெட்ரோல் கொண்டு வருகிறார்களா? என்று கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலும், அலுவலக நுழைவு வாயிலும் தீவிர சோதனையிட்ட பிறகே, உள்ளே அனுமதித்தனர்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அந்த வாகனத்தில் இருந்து பெட்ரோல் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து விடுவார்களா? என்ற சந்தேகத்தில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்குள்ளே பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் போலீசார் தங்களுக்கு தெரிந்த பொதுமக்களை மட்டும் இரு சக்கர வாகனத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மனு கொடுக்க தங்களுடைய இரு சக்கர வாகனங்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
ஆனால் அவர்களை நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி, இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு, கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து சென்று மனு கொடுத்து வாருங்கள் என்று கூறினர். இதனால் விவசாயிகள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் முக்காடு அணிந்து மாவட்டம் நிர்வாகம் மற்றும் போலீசாரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அரசு அதிகாரிகளையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் விவசாயிகளை இரு சக்கர வாகனங்களை கொண்டு செல்ல அனுமதித்ததால், விவசாயிகள் தர்ணாவை கைவிட்டனர்.