கோயம்பேடு அருகே வாலிபர் கொலையில் 2 பேர் கைது யார் பெரிய ரவுடி? என்ற மோதலில் கொன்றதாக வாக்குமூலம்
கோயம்பேடு அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். யார் பெரிய ரவுடி? என்ற மோதலில் கொன்றதாக கைதான இருவரும் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
பூந்தமல்லி,
திருவேற்காட்டை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). இவர், கடந்த ஆண்டு பூந்தமல்லியில் போலீஸ்காரர் ஒருவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது மதுரவாயல், கோயம்பேடு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் உள்ளன.
கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், ஏ.வி.கே. நகரில் உள்ள தனியார் அட்டை கம்பெனி அருகில் ரஞ்சித், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கொலையான ரஞ்சித்தின் நண்பர்களான அம்பத்தூர் பாடி குப்பத்தைச் சேர்ந்த மண்டை தினேஷ் என்ற ஜோசப் (21), ஆகாஷ் என்ற ஆனஸ்ட்ராஜ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
யார் பெரிய ரவுடி?
சம்பவத்தன்று ரஞ்சித் உள்பட நாங்கள் 7 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது போதையில் இருந்த ரஞ்சித், “நான் போலீசையே வெட்டியவன். நான்தான் பெரிய ரவுடி. எனக்கு கீழேதான் நீங்கள் எல்லாம். என்னைவிட நீங்கள் பெரிய ரவுடி ஆக முடியாது” என்றார்.
இதனால் யார் பெரிய ரவுடி? என்பதில் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள், ரஞ்சித்தை சரமாரியாக தாக்கினோம். பின்னர் பாட்டிலால் குத்தியும், தலையில் கல்லைப்போட்டும் அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டோம்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தலை மறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.