குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலைமறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த நாராயணபுரம் ஊராட்சியில் உள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
சாலை மறியல்
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று காலை ஆர்.கே.பேட்டை அம்மையார்குப்பம் சாலையில் காலிகுடங்களுடன் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சமாதானம் அடைந்ததை தொடர்ந்து, அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.