மதுபாட்டிலால் தலையில் அடித்து வாலிபர் கொலை: மதுரையை சேர்ந்த 3 பேர் கைது

மதுபாட்டிலால் தலையில் அடித்து வாலிபரை கொலை செய்த வழக்கில் மதுரையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-04 22:45 GMT
வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கடந்த 31-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். சதுரகிரி வரும் பக்தர்கள் மாவுற்றில் உள்ள உதயகிரிநாதரை தரிசித்து அங்கு கிடாய் வெட்டி அன்னதானம் வழங்குவது வழக்கம். இதன்படி வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியை சேர்ந்த ராம்குமார்(வயது 21) தனது நண்பர்களுடன் உதயகிரிநாதரை தரிசிக்க வந்தார்.

அப்போது அவருக்கும், மதுரையை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் மதுபாட்டிலால் ராம்குமாரை தலையில் சரமாரியாக அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை வழக்கு குறித்து வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் மூக்கையன் ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதுரை அருள்தாஸ் புரத்தை சேர்ந்த பிரகாஷ்(20), தங்கபாலு பாண்டி(22), ஆகாஷ்(16) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்