கொடைக்கானல் பகுதியில், பேரிக்காய்கள் விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல் பகுதியில் இந்த ஆண்டு பேரிக்காய்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பேரிக்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. இதில் நாட்டு பேரி, சர்க்கரை பேரி, ஊட்டி பேரி, தண்ணீர்பேரி ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும் இந்த ஆண்டு பேரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதன் காரணமாக காய்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. பொதுவாக கொடைக்கானல் பகுதியில் விளையும் பேரிக்காய்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி கிலோ 30 ரூபாய் என வெளிமாநில வியாபாரிகளால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது விளையும் பேரிக்காய்கள் கேரள மாநிலத்திற்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சில்லறை விலையில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் பண்டிகைகள் அதிக அளவில் உள்ளதால் பேரிக்காய்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர்.