ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி; வாலிபர் கைது போலீஸ் ஏட்டு உள்பட 3 பேரிடம் விசாரணை
குறைந்த விலைக்கு தங்க காசு வாங்கித்தருவதாக கூறி ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஏட்டு உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் அஸ்தம்பட்டி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சேலம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில், ஏட்டாக பணியாற்றி வரும் ஆறுமுகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மேச்சேரியை சேர்ந்த ஒருவர் குறைந்த விலைக்கு தங்க காசுகள் விற்பனை செய்கிறார், நீங்கள் குறைந்த அளவு பணம் கொடுத்தால், அதிக தங்க காசுகள் வாங்கித்தருவதாக ஆறுமுகம், உமாசங்கரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ஆசிரியர் உமாசங்கர், ஆறுமுகம் கூறியபடி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு தங்க நகைக்கடை முன்பு சம்பவத்தன்று ரூ.5 லட்சத்தை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தங்க காசுகள் இருப்பதாக கூறி ஒரு பெட்டியை கொடுத்தார். இதையடுத்து உமாசங்கர் அவரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்தார். அப்போது ஒரு கும்பல் வந்து உமாசங்கரிடம் இருந்த பெட்டியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இது குறித்து உமாசங்கர், போலீஸ் ஏட்டு ஆறுமுகத்திடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் குறைந்த விலைக்கு தங்க காசு வாங்கித்தருவதாக கூறி போலீஸ் ஏட்டு ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரூ.5 லட்சம் மோசடி செய்து விட்டனர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உமாசங்கர் சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகாரை விசாரிக்க கோரி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் ஆனந்தகுமாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் ரூ.5 லட்சம் மோசடியில் போலீஸ் ஏட்டு ஆறுமுகம், மற்றும் சேலத்தை சேர்ந்த சூர்யா, நாகராஜ், திருச்செங்கோட்டை சேர்ந்த கருப்பண்ணன் (வயது 26) ஆகியோர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையொட்டி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பண்ணனை கைது செய்தனர். போலீஸ் ஏட்டு ஆறுமுகம் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.