கோத்தகிரியில் அட்டகாசம் செய்யும், கரடிகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது
கோத்தகிரியில் அட்டகாசம் செய்யும் கரடிகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மிளிதேன் பகுதியில் 3 கரடிகள் நடமாடி வந்தன. அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கரடிகளை பிடிக்க அங்குள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்துக்குள் வனத்துறையினர் கூண்டு வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அந்த கூண்டுக்குள் சிக்காமல் கரடிகள் சுற்றித்திரிகின்றன. இதேபோன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திமலையில் உள்ள முருகன் கோவிலுக்குள் கரடிகள் நுழைய முயன்றன. மேலும் மிஷன் காம்பவுண்டு பகுதியில் பேக்கரி கதவை உடைத்து கரடிகள் அட்டகாசம் செய்தன. இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வனச்சரகர் சீனிவாசன் உத்தரவின்பேரில் வனவர் சக்திவேல், வன காப்பாளர்கள் வீரமணி, தருமன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அந்த பேக்கரியின் முன்பு கரடிகளை பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் கூண்டுக்குள் கரடிகளுக்கு பிடித்தமான உணவு வகைகள் மற்றும் பழங்களை வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்.கைகாட்டி பகுதியில் ஜெகதீஷ் என்பவரின் பேக்கரியை தொடர்ந்து 4 முறை உடைத்து அட்டகாசம் செய்து வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அவலாஞ்சி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டோம்.
அதேபோல இந்த பகுதியில் சுற்றித்திரியும் கரடிகளையும் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுவோம் என்றனர்.