பொன்பரப்பி கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பொன்பரப்பி கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் சித்திரை மாதத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தால் தீமிதி திருவிழாவை தொடர்ந்து நடத்த அரியலூர் மாவட்ட போலீசார் தடை விதித்தனர். இருப்பினும் கிராம மக்கள் திருவிழாவை தொடர்ந்து நடத்த கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் மோதல் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்கள்.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் தேர்தல் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே உடையார்பாளையம் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தடைபட்ட தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் தீமிதி திருவிழாவிற்கு பயன்படுத்திய தேரினை கிராம மக்கள் அகற்றாமல் அதே தேரினை முதன்முறையாக ஆடிப்பூர திருவிழாவுக் கும் பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி பொன்பரப்பி ஆடிப்பூர தேரோட்டம் கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு அம்மனுக்கு சக்தி அழைத்தல், வீதி உலாவும் நடைபெற்றது. 3-ந் தேதி காலை 10 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. 4-ந் தேதி காலை அம்மன் வீதி உலாவும், தேர்த்திருவிழாவும் நடைபெற்றது. திருவிழாவில் தேரானது மகா சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேலத்தெரு, வடக்கு தெரு, கீழத்தெரு, தெற்கு தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
திருவிழாவை முன்னிட்டு தெய்வீக நடன குழுவினர் தெய்வங்களின் வேடமணிந்து நடனமாடினர், வாண வேடிக்கை நடைபெற்றது. தேர் திருவிழாவில் பக்தர்கள் வீடு வீடாக கூழ் செய்து அம்மனுக்கு படைத்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினார். தேர் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பிரச்சினைக்கு உரிய ஊரில் முதல் முறையாக ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.