காங்கேயத்தில் கார்கள் தாக்கப்பட்ட சம்பவம்: இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு

காங்கேயத்தில் கொங்கு மக்கள் முன்னணியினரின் கார்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-08-04 23:00 GMT
காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் நேற்று முன்தினம் அவரது நினைவு நாளையொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் மேலப்பாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக காங்கேயம் கரூர் ரோட்டில் முத்தூர் பிரிவு அருகே கார்களில் கொங்கு மக்கள் முன்னணியினர் அதன் தலைவர் சி.ஆறுமுகம் தலைமையில் ஆயத்தமாகி கொண்டு இருந்தனர்.

அப்போது கரூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த தனியரசு எம். எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கொங்கு மக்கள் முன்னணியினர் நிற்பதை பார்த்து தங்கள் கார்களை அங்கு நிறுத்தினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதில் தனியரசுவின் ஆதரவாளர்கள் அங்கு சாலையோரம் நின்றிருந்த கொங்கு மக்கள் முன்னணியினரின் கார்களை அடித்து நொறுக்கினர். இதில் 7 கார்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமானது.

இதை தொடர்ந்து கார்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முத்தூர் பிரிவு அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு மக்கள் முன்னணியினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். கொங்கு மக்கள் முன்னணியின் சேலம் மாவட்ட செயலாளர் சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் அருள் மற்றும் அடையாளம் தெரியாத 30 பேர் மீதும்,தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் அருள் கொடுத்த புகாரின் பேரில் கொங்கு மக்கள் முன்னணியின் தலைவர் சி.ஆறுமுகம் மற்றும் அடையாளம் தெரியாத 7 பேர் உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்