மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்வதால் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு தடை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்வதால் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு தடை விதித்திருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்வதால் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு தடை விதித்திருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சி பட்ஜெட்டுக்கு தடை
பெங்களூரு மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதாக கூறி பணம் விடுவிக்கப்படுகிறது. அவ்வாறு விடுவிக்கப்படும் பணம் அனாவசியமாக செலவு செய்யப்படுகிறது. மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ஊழல் செய்யப்படுகிறது. அனாவசியமாக செய்யப்படும் செலவுகள் மற்றும் ஊழலுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. பெங்களூரு நகரில் பல இடங்களில் தேவையில்லாமல் நடைபாதைகளை பெயர்த்து, அதனை மீண்டும் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்காக ஒதுக்கப்படும் நிதியும் சரியாக செலவு செய்வதில்லை. மாநகராட்சியில் நடைபெறும் ஊழல், தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்தவும், மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தடுக்கவும் மாநகராட்சி பட்ஜெட்டுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளேன். பெங்களூருவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை தடை செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது.
குப்பை பிரச்சினைக்கு தீர்வு
மாநகராட்சி பட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் கூடிய விரைவில் ஆலோசனை நடத்த உள்ளேன். பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள திட்டங்கள், ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் உள்ளிட்டவை குறித்து பரிசீலனை நடத்துவேன். அதன்பிறகு, மாநகராட்சி பட்ஜெட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, முறையான அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பேன். நான் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு செல்கிறேன்.
டெல்லியில் இருந்து திரும்பியதும் பெங்களூருவில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அடுத்த வாரம் பெங்களூருவில் நகர் வலம் செல்ல உள்ளேன். அப்போது பெங்களூருவில் குவியும் குப்பைகளை கொட்டுவதற்கான இடம் தேர்வு செய்து, இங்கு நிலவும் குப்பை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பேன்.
24 மணி நேரத்தில்...
மந்திரிசபை விரிவாக்கத்தில் எந்த விதமான காலதாமதமும் ஏற்படவில்லை. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். பா.ஜனதா மேலிட தலைவர்கள் அனுமதி வழங்கிய 24 மணி நேரத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். பக்ரீத் பண்டிகைக்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பினர் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பக்ரீத், கிறிஸ்துமஸ், இந்துகள் என எந்த மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளாக இருந்தாலும், அதற்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது கடந்த ஆட்சியாளர்கள் தேவையில்லாமல் வழக்குகளை பதிவு செய்திருந்தனர். அந்த வழக்குகளை பா.ஜனதா அரசு திரும்ப பெற்றுள்ளது. இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.