தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே தனியாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-08-04 22:45 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த அன்னை இந்திரா நினைவுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக செங்குன்றம் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பலராமனுக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடோனை சோதனை செய்தார். அப்போது, அங்கு 3 டன் எடைகொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் குடோன் அமைந்துள்ள பகுதி சோழவரம் போலீஸ் எல்லைக்குள் வருவதால், சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு சென்ற சோழவரம் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சோழவரம் போலீசார் குடோன் யாருடையது? செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்