குமரி மாவட்டத்தில் சாரல் மழை: திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

குமரி மாவட்டத்தில் சாரல் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2019-08-04 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-10.2, சுருளோடு-7, கன்னிமார்-9.2, மயிலாடி-4.6, கொட்டாரம்-11.2, புத்தன்அணை-4.6, பேச்சிப்பாறை-12, பெருஞ்சாணி-5.2, சிற்றார் 1-4, சிற்றார் 2-8.4, மாம்பழத்துறையாறு-6 என்ற அளவில் மழை பதிவானது.

மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 307 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு 312 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 297 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 450 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

திற்பரப்பு அருவி

இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் நேற்று திற்பரப்பு அருவியில் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் விளையாடினார்கள்.

மேலும் செய்திகள்