திருக்காட்டுப்பள்ளி அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருக்காட்டுப்பள்ளி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உடைப்பை சரிசெய்வார்களா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-08-03 22:30 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே விஷ்ணம்பேட்டை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்காக நிலத்துக்கடியில் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.

இங்கிருந்து செல்லும் தண்ணீர் முழு விசையுடன் அறந்தாங்கி வரை செல்ல ஆங்காங்கே காற்று போக்கு குழாய்களும் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள சாமிநாதபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள அறந்தாங்கி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் குடிநீர் வீணாகி வருகிறது.

பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அங்கு உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகாதபடி தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். குறுவை பயிர் நடவு செய்யப்பட்டுள்ள வயல்கள், காவிரி, குடமுருட்டி ஆகிய ஆறுகளுக்குள் தண்ணீர் பாய்ந்து வருகிறது.

இதை அதிகாரிகள் கவனித்து குழாய் உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

போக்குவரத்து பாதிப்பு

இதே பகுதியில் கடந்த வாரம் குழாய் உடைப்பு ஏற்பட்டபோது பொக்லின் எந்திரம் மூலம் நிலத்தை தோண்டி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சில நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடாமல் இருப்பதற்காக தடுப்பு அமைத்துள்ளோம். திருக்காட்டுப்பள்ளியில் இருந்து செங்கிப்பட்டி வரை பல்வேறு இடங்களில் குழாயில் உடைப்பு காணப்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. கூட்டு குடிநீர் திட்ட குழாயில் நிரந்தரமாக உடைப்பு ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்