தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு; சூறாவளி காற்றால் சாலையை மணல் மூடியது

தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சூறாவளி காற்றால் சாலையை மணல் மூடியது.

Update: 2019-08-03 23:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. இங்கு கடந்த 3 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி துறை முகத்தை தாண்டி கடல் அலைகள் மேல் நோக்கி சீறி எழுகின்றன.

பலத்த சூறாவளி காற்றால் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து கம்பிப்பாடு அரிச்சல்முனை வரை பல இடங்களில் சாலையை மணல் மூடி உள்ளது. இதனால் ஆட்டோ,கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் மணலில் சிக்கி தவித்து வருகின்றன.கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளதால் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுக தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அரிச்சல்முனை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்காமல் இருக்க கடலோர போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ராமேசுவரத்தில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது.

பலத்த சூறாவளிக்காற்றினால் ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி, சென்னை மற்றும் மதுரைக்கு செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்றன. முன்னதாக ராமேசுவரத்தில் இருந்து பயணிகள் அரசு பஸ்களில் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் அழைத்து வரப்பட்டனர். பாம்பனில் இருந்து ரெயிலில் அவர்கள் தங்களது பயணத்தை தொடங்கினர். 3 ரெயில்களும் பயணிகள் இன்றி பாம்பன் ரெயில் நிலையத்துக்கு வந்தன.

மேலும் செய்திகள்