சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து ஆற்றில் படையல் போட்டு மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து வாய்மேடு அருகே ஆற்றில் படையல் போட்டு மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-03 23:00 GMT
வாய்மேடு,

குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு கர்நாடக அரசிடம் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் பெற்று தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடாத தமிழக அரசை கண்டித்தும், ஆடிப்பெருக்கு விழாவுக்கு ஆறுகளில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும் நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் முள்ளியாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காவிரி தமிழ் தேசிய விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆற்றில் படையல் போட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மணலை உடலில் கொட்டி கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்