எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது: ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழங்கள் அடங்கிய கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்ததால் பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே நேற்று ரூ.500 அபராதம் செலுத்தினார்.

Update: 2019-08-03 23:30 GMT
பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழங்கள் அடங்கிய கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்ததால் பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே நேற்று ரூ.500 அபராதம் செலுத்தினார்.

பெங்களூரு மேயர்

பெங்களூரு மாநகராட்சி மேயராக இருப்பவர் கங்காம்பிகே. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் பெங்களூரு நகரை தூய்மையான நகரமாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

கடைகள், வணிக வளாகங்களில் மேயர் கங்காம்பிகே அதிரடி சோதனை நடத்தி பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார். அத்துடன் வியாபாரிகளுக்கு அபராதமும் விதித்தார். இந்த பணியை தற்போது மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

எடியூரப்பாவுடன் சந்திப்பு

இந்த நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பாவை கடந்த 30-ந் தேதி மேயர் கங்காம்பிகே சந்தித்தார். அப்போது எடியூரப்பாவுக்கு சால்வை போர்த்தி, உலர் பழங்கள் அடங்கிய கூடையை கொடுத்து பெங்களூரு மாநகராட்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினார்.

இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு, கங்காம்பிகே வழங்கிய உலர் பழக்கூடையானது பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதாவது, ‘பெங்களூருவில் பிளாஸ்டிக் தடை செய்து அபராதம் விதிக்கும் மேயர் கங்காம்பிகே விதிமுறையை பின்பற்றாமல் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார்‘ என்று பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ரூ.500 அபராதம்

இதுபற்றி மேயர் கங்காம்பிகே விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பிளாஸ்டிக் சுற்றப்பட்ட உலர் பழங்கள் அடங்கிய கூடையை யார் வாங்கியது என்பது தெரியவில்லை. என் தவறை உணர்ந்து கொள்கிறேன். இதற்கான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கிறேன். பெங்களூரு நகரின் முதல் குடிமகளான நான் பிறருக்கு முன்உதாரணமாக இருக்க விரும்புகிறேன். எனவே, பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்கு ரூ.500 அபராதம் கட்டுகிறேன்‘ என்று கூறினார்.

அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் கங்காம்பிகே ரூ.500 அபராதமாக செலுத்தி அதற்கான ரசீதை பெற்று கொண்டார்.

மேலும் செய்திகள்