திருச்சி விமான நிலையத்தில் ரூ.26½ லட்சம் தங்க நகைகள்-காசுகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.26½ லட்சம் தங்க நகைகள்-காசுகள் பறிமுதல் உடலில் மறைத்து கடத்திய 5 பயணிகளிடம் விசாரணை.

Update: 2019-08-03 22:45 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 5 பயணிகளின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனியாக அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் 5 பேரும் உடலில் மறைத்து தங்கச்சங்கிலிகள் மற்றும் தங்கக் காசுகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த முஹம்மது யாசின், ஷாஜகான், ஜியாவுதின், பைசல் அமீன், முகமது இத்ரிஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 750 கிராம் எடை கொண்ட 7 தங்கச் சங்கிலிகள் மற்றும் 8 தங்கக் காசுகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிடிபட்ட 5 பயணிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்