பெண் அதிகாரி குளித்ததை படம் பிடித்ததாக குற்றச்சாட்டு: அறநிலையத்துறை இணை கமிஷனர் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு

பெண் அதிகாரி குளித்ததை படம் பிடித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் அறநிலையத்துறை இணை கமிஷனர் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

Update: 2019-08-02 23:09 GMT
மதுரை,

மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனராக இருந்தவர் பச்சையப்பன். இவர் சதுரகிரியில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணிக்காக வந்த பெண் அதிகாரி ஒருவர் குளித்ததை கேமராவில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பேரையூர் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் பச்சையப்பன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் தான் உள்ளன. பதவி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. சிலருக்காக என்னை பலிகடா ஆக்கும் செயல்கள் நடந்துள்ளன. இந்தநிலையில் என்னை பணியிடை நீக்கம் செய்து கடந்த 11-ந்தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காலத்தில் நாகப்பட்டினத்தில் தங்கியிருக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை அங்கிருந்து வெளியேறக்கூடாது என்று கூறியுள்ளனர். பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, என்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தற்போதைக்கு என் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். என் மீதான வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று மேல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரருக்கு அளிக்கப்பட்டுள்ள மெமோவுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். அதேவேளையில் மனுதாரரின் கோரிக்கை மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்