வைத்தர்ணா ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றபோது ஆற்றில் விழுந்த பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் தேடும் பணி தீவிரம்
வைத்தர்ணா ரெயில்வே பாலத்தில் நடந்து சென்ற பெண் ஆற்றில் தவறி விழுந்தார். இதில், ஆற்று வெள்ளம் அடித்து சென்றதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வசாய்,
வைத்தர்ணா ரெயில்வே பாலத்தில் நடந்து சென்ற பெண் ஆற்றில் தவறி விழுந்தார். இதில், ஆற்று வெள்ளம் அடித்து சென்றதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆற்றில் விழுந்த பெண்
பால்கர் மாவட்டம் வைத்தர்ணா அருகே உள்ள வாதிவ் கிராமத்தை சேர்ந்த பெண் பேபி பாய் போகிர்(வயது60). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பேபி பாய் போகிர் வைத்தர்ணா நதியின் குறுக்கே உள்ள ரெயில்வே பாலத்தின் வழியாக சிலருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென பேபி பாய் போகிர் கால் இடறி பாலத்தின் இடைவெளி வழியாக ஆற்றில் விழுந்தார். இதில், ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் அவரை அடித்து சென்றது.
தேடும் பணி தீவிரம்
இதனைக் கண்டு அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேபி பாய் போகிரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டை 2-வது நாளாக நேற்றும் நடந்தது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது.