புதுச்சேரியில் பயங்கரம்; பழிக்குப் பழியாக வாலிபர் வெட்டிக் கொலை

புதுவை லாஸ்பேட்டையில் பழிக்குப்பழியாக வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-08-02 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 26). இவர் மீது கொலை வழக்கு உள்ளது. நேற்று இரவு லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின்ரோட்டில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. அவர்களை பார்த்ததும் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.

ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி அவரை சரமாரியாக வெட்டியது. இதில் ஆறுமுகத்தின் கை துண்டானது. முகம் சிதைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். அவர் வைத்திருந்த செல்போன், மணிபர்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ்(பொறுப்பு) லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கடந்த ஜனவரி மாதம் மடுவுபேட் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை பாரில் நடந்த அருள் கொலை வழக்கில் ஆறுமுகம் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.

பின்னர் ஆறுமுகம் மும்பைக்கு சென்று விட்டார். அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் அவர் புதுவைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் தான் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே மதுக்கடை பாரில் நடந்த தகராறில் அருள் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ஆறுமுகத்தை கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்