ஏற்காட்டில் பலத்த காற்று மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஏற்காட்டில் நேற்று பலத்த காற்று வீசியது. இதனால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ஏற்காடு,
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்கிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஏற்காட்டில் திடீரென்று பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக ஏற்காடு மஞ்சகுட்டை சாலையில் ரவுண்டானா அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. மேலும் அந்த மரம் மின்கம்பிகள் மீது விழுந்ததால், கம்பிகள் துண்டிக்கப்பட்டதுடன் 2 மின் கம்பங்களும் சேதம் அடைந்தன.
மரம் ரோட்டின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்காட்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மின்வாள் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு மரத்தை வெட்டி அகற்றினார்கள். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரத்தை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக காலை 5 மணி முதல் 7 மணி வரை 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரம் விழுந்ததால் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். மின் கம்பங்களை சரி செய்த பின்னர் மீண்டும் மின்வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.